Skip to main content

Chapter 95: Medicine (மருந்து )

Parimelazhaghar's commentary in its original form:

941
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.
மிகினும் குறையினும் - உணவும் செயல்களும் ஒருவன் பகுதிக்கு ஒத்த அளவின் அன்றி அதனின் மிகுமாயினும் குறையுமாயினும்; நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று நோய் செய்யும் - ஆயுள்வேத முடையாரால் வாதமுதலாக எண்ணப்பட்ட மூன்று நோயும் அவருக்குத் துன்பஞ் செய்யும்.
விளக்கம் ('நூலோர் எண்ணிய' எனவே, அவர் அவ்வாற்றான் வகுத்த வாதப்பகுதி பித்தப்பகுதி ஐயப்பகுதி என்னும் பகுதிப்பாடும் பெற்றாம். அவற்றிற்கு உணவு ஒத்தலாவது சுவை வீரியங்களானும் அளவானும் பொருந்துதல். செயல்கள் ஒத்தலாவது மனமொழி மெய்களாற் செய்யும் தொழில்களை அவை வருந்துவதற்கு முன்னே ஒழிதல். இவை இரண்டும் இங்ஙனமின்றி மிகுதல் குறைதல் செய்யின், அவை தத்தம் நிலையின் நில்லாவாய் வருத்தும் என்பதாம். காரணம் இரண்டும் அவாய்நிலையான் வந்தன. முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. இதனால் யாக்கைகட்கு இயல்பாகிய நோய் மூவகைத்து என்பதூஉம், அவை துன்பஞ்செய்தற்காரணம் இருவகைத்து என்பதூஉம் கூறப்பட்டன இன்பம் செய்தற்காரணம் முன்னர்கூறுப.) ---
942
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
அருந்தியது அற்றது போற்றி உணின் - ஒருவன் முன்னுண்டது அற்றபடியைக் குறிகளால் தெளிய அறிந்த பின் உண்ணுமாயின்; யாக்கைக்கு மருந்து என வேண்டாவாம் - அவன் யாக்கைக்கு மருந்து என்று வேறு வேண்டாவாம்.
விளக்கம் (குறிகளாவன-யாக்கை நொய்ம்மை, தேக்கின்தூய்மை, காரணங்கள் தொழிற்குரியவாதல், பசி மிகுதல் என இவை முதலாயின. பிணிகள் யாக்கையவாகலின், 'யாக்கைக்கு' என்றார். 'உணின்' என்பது அதன் அருமைதோன்ற நின்றது.) ---
943
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
அற்றால் அளவு அறிந்து உண்க= முன் உண்டது அற்றால் பின் உண்பதனை அறும் அளவறிந்து அவ்வளவிற்றாக உண்க; உடம்பு பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு அஃது= இறப்பவும் பலவாய பிறயாக்கைகளிற் பிழைத்துப் பெறற்கு அரிய இம்மானுட யாக்கையைப பெற்றான், அதனை நெடுங்காலம் கொண்டுசெலுத்து நெறி அதுவாகாலான்.
விளக்கம் இம்மை மறுமை வீடுபேறுகள் எய்தற்பாலது ஈதொன்றுமேயாகலின், 'உடம்பு பெற்றான்' என்றும், அது நெடிது நின்றுழி அவை பெருகச் செய்துகொள்ளலாம் ஆகலின் 'நெடிது உய்க்குமாறு' என்றும் கூறினார். பெற்றால் என்று பாடம்ஓதுவாரும் உளர்.
944
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.
அற்றது அறிந்து - முன்னுண்டது அற்றபடியை யறிந்து; துவரப் பசித்து - பின் மிகப்பசித்து; மாறல்ல கடைப் பிடித்துத் துய்க்க - உண்ணுங்கால் மாறு கொள்ளாத உணவுகளைக் குறிக்கொண்டு உண்க.
விளக்கம் (அற்றது அறிந்த என்னும் பெயத்துரை அதனை யாப்புறுத்தற் பொருட்டு. உண்டது அற்றாலும் அதன் பயனாகிய இரதம் அறாதாகலான், அதுவும் அறல் வேண்டும் என்பார், 'மிகப் பசித்து' என்றார். பசித்தால் வினை ஈண்டு உடையான்மேல் நின்றது. மாறு கொள்ளாமையாவது உண்பான் பகுதியோடு மாறு கொள்ளாமையும், கால இயல்போடு மாறுகொள்ளாமையும், சுவை வீரியங்களால் தம்முள் மாறுகொள்ளாமையும் ஆம். அவையாவன, முறையே வாதபித்த ஐயங்களானாய பகுதிகட்கு அடாதவற்றைச் செய்வனவாதலும், பெரும்பொழுது சிறுபொழுது என்னும் காலவேறுபாடுகளுள் ஒன்றற்காவன பிறிதொன்றற்கு ஆகாமையும், தேனும் நெய்யும் தம்முள் அளவொத்து நஞ்சாதல் போல்வனவும் ஆம். அவற்றைக் குறிக்கொள்ளாது மனம் பட்டவாற்றால் துய்ப்பின், அதனானே நோயும் மரணமும் வருதலின், 'கடைப்பிடித்து' என்றார்.) ---
945
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின் - அம்மூவகை மாறுகோளும் இல்லாத உணவைத் தன் உள்ளம் வேண்டிய அளவினான் அன்றிப் பிணிவாரா அளவினால் ஒருவன் உண்ணுமாயின்; உயிர்க்கு ஊறுபாடு இல்லை - அவன் உயிர்க்குப் பிணிகளால் துன்பம் விளைதல் உண்டாகாது.
விளக்கம் (உறுவதனை 'ஊறு' என்றார். அஃது இன்பத்திற்செல்லாதாயிற்று இல்லை என்பது தொடர்பாகலின். துன்பமுறுவது உயிரேயாகலின், அதன்மேல் வைத்துக் கூறினார். மாறுபாடு இல்வழியும் குறைதல் நன்று என்பதாம். இவை நான்கு பாட்டானும் உண்ணப்படுவனவும், அவற்றது அளவும், காலமும், பயனும் கூறப்பட்டன. ---
946
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.
இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம்போல் - அக்குறைதலை நன்று என்று அறிந்த அவ்வாறே உண்பவன்மாட்டு இன்பம் நீங்காது நிலை நிற்குமாறு போல; கழிபேரிரையான்கண் நோய் நிற்கும் - மிகப்பெரிய இரையை விழுங்குவான் மாட்டு நோய் நீங்காது நிலைநிற்கும்.
விளக்கம் (அவ்வாறே உண்டல் - உண்ணலாம் அளவில் சிறிது குறை உண்டல். இன்பமாவது வாதமுதலிய மூன்றும் தத்தம் நிலையில் திரியாமையின் மனம் மொழி மெய்கள். அவன் வயத்தவாதலும், அதனான் அறம் முதலிய நான்கும் எய்தலும் ஆம். இரையை அளவின்றி எடுத்து அதனான் வருந்தும் விலங்கொடு ஒத்தலின் 'இரையான்' என்றார். விதி எதிர்மறைகளை உவமமும் பொருளும் ஆக்கியது இரண்டானும் பெறுதற்கு.) --
947
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.
தெரியான் தீ அளவு அன்றிப் பெரிது உண்ணின் - தன் பகுதியும் அதற்கு ஏற்ற உணவும் காலமும் ஆராயாது, வேண்டியதோர் உணவை வேண்டியதோர் காலத்து, வயிற்றுத் தீ அளவின்றி ஒருவன் மிக உண்ணுமாயின்; நோய் அளவு இன்றிப் படும் - அவன் மாட்டு நோய்கள் எல்லையற வளரும்.
விளக்கம் (தெரியாமை வினைக்குச் செயப்படு பொருள்கள் அதிகாரத்தான் வந்தன. நோய் - சாதியொருமை. இவை இரண்டு பாட்டானும் அவ்வகை உண்ணாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.) ---
948
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
நோய் நாடி-மருத்துவனாயின் ஆதுரன் மாட்டு நிகழ்கின்ற நோயை அதன் குறிகளான் இன்னது என்று துணிந்து; நோய் முதல் நாடி-பின் அது வருதற் காரணத்தை ஆராய்ந்து; அது தணிக்கும் வாய் நாடி - பின் அது தீர்க்கும் உபாயத்தினை அறிந்து; வாய்ப்பச் செயல் - அதனைச் செய்யும்வழிப் பிழையாமற் செய்க.
விளக்கம் (காரணம்: உணவு செயல் என முற்கூறிய இரண்டும். அவற்றை ஆயுள்வேதமுடையார் நிதானம் என்ப. அவை நாடுதற்பயன்-நோயினையும் வாயினையும் ஐயமறத் துணிதல். மருந்த செய்தல், உதிரங் களைதல், அறுத்தல், சுடுதல் முதலிய செயல்களெல்லாம் அடங்குதற்கு, 'அது தணிக்கும் வாய்' என்றார். "கழுவாயும் உள"[புற. 34] என்றார் பிறரும். பிழையாமை-பழைய மருத்துவர் செய்து வருகின்ற முறைமையின் தப்பாமை.) ---
949
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.
கற்றான்-ஆயுள் வேதத்தினைக் கற்ற மருத்துவன்; உற்றான் அளவும் பிணி அளவும் காலமும் கருதிச் செயல்- அவ்வுபாயத்தினைச் செய்யுங்கால், ஆதுரன் அளவினையும் அவன்கண் நிகழ்கின்ற நோயின் அளவினையும் தன் செயற்கு ஏற்ற காலத்தினையும் அந்நூல் நெறியால் நோக்கி, அவற்றோடு பொருந்தச் செய்க.
விளக்கம் (ஆதுரன் அளவு-பகுதி பருவம் வேதனை வலிகளின் அளவு. பிணி அளவு-சாத்தியம், அசாத்தியம், யாப்பியம் என்னும் சாதிவேறுபாடும், தொடக்க நடு ஈறு என்னும் அதன் பருவ வேறுபாடும், வன்மை மென்மைகளும் முதலாயின. காலம்-மேற் சொல்லியன. இம் மூன்றும் பிழையாமல் நூல் நெறியானும் உணர்வு மிகுதியானும் அறிந்த செய்க என்பார், 'கற்றான் கருதிச் செயல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவ்விழுக்குப் பட்டுழி மருத்துவன் தீர்க்குமாறு கூறப்பட்டது.) ---
950
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற் கூற்றே மருந்து.
மருந்து-பிணிக்கு மருந்தாவது; உற்றவன் - அதனையுற்றவன்; தீர்ப்பான் - அதனைத் தீர்க்கும் மருத்துவன்; மருந்து-அவனுக்குக் கருவியாகிய மருந்து; உழைச் செல்வான் என்று அப்பால் நாற்கூற்று - அதனைப் பிழையாமல் இயற்றுவான் என்று சொல்லப்பட்ட நான்கு பகுதியையுடைய நான்கு திறத்தது.
விளக்கம் (நான்கு என்னும் எண் வருகின்றமையின், அது நோக்கி 'அப்பால்' என்றொழிந்தார். 'நான்குகூற்றது' என்பது விகாரமாயிற்று. அவற்றுள் உற்றவன்வகை நான்காவன. பொருளுடைமை, மருத்துவன் வழிநிற்றல், நோய்நிலை உணர்த்தல் வன்மை, மருந்துத் துன்பம் பொறுத்தல் என இவை. தீர்ப்பான் வகை நான்காவன: நோய் கண்டு அஞ்சாமை, ஆசிரியனை வழிபட்டு எய்திய கல்வியும் நுண்ணறிவும் உடைமை, பலகாலும் தீர்த்து வருதல், மனமொழி மெய்கள் தூயவாதல் என இவை. மருந்தின்வகை நான்காவன: பல பிணிகட்கும் எற்றல், சுவை வீரியம் விளைவாற்றல்களான் மேம்படுதல், எளிதின் எய்தப்படுதுல், பகுதியோடு பொருந்துதல் என இவை. இயற்றுவான் வகை நான்காவன: ஆதுரன்மாட்டு அன்புடைமை, மனமொழி மெய்கள் தூயவாதல், சொல்லியன அவ்வாறே செய்தல் வன்மை, அறிவுடைமை என இவை. இவை யெல்லாம் கூடியவழியல்லது பிணி தீராமையின், இத்தொகுதியையும் 'மருந்து' என்றார்; ஆயுள்வேதமுடையாரும் இவை கால்களாக நடக்கும் என்பது பற்றி 'பாதம்' என்றும், இவை மாறுபட்டவழிச் சாத்தியமும் முதிர்ந்து அசாத்தியமாம் என்றும் கூறினார். இதனான், அதனைத் தீர்த்தற்கு வேண்டுவன எல்லாம் தொகுத்துக் கூறப்பட்டன.) ---

Comments